Thursday, July 29, 2010

ஒரு ஊரில் ஒரு கடல் ...

கடலோடிக்கிடந்த நினைவுகள்
கரை சேர்ந்த கதையறிந்து
பார்க்க வந்திருந்தாய்...
ஆர்ப்பரித்துத் தணிகின்றது,
அலைசூழ் கடல்...

,..

Wednesday, July 21, 2010

நாளைய கதை

நிதி காக்கும் பூதத்தின் கதையை கேட்க
கண்மூடி அமர்ந்திருக்கிறாய்.
உன் இமை காக்கும் கண்களின் கதையை
வேறொரு நாள் சொல்லப்போகிறேன்.

,..

மழை பெய்யும் தெரு

நனைந்திருக்கும் வீடுகளின்
அழைப்புமணியிசைத்து
வாசற்கதவு மற்றும் ஜன்னல்கதவுகளை
திறந்து வைக்கச்சொல்லுங்கள்.
கொஞ்சம் உள்ளுக்குள்ளும் பெய்யட்டும்
மழை.
,..

Monday, July 5, 2010

மழைப்பேச்சு...

ஒரு மழை
பெய்து தீரும் வரை
பேசியிருக்கலாம் என்றாய்.
அந்திச்சூரியன்
எதிர்வானில் தெளிக்கும்
நிறக்கூட்டத்திற்கு அப்பால்
தெளியத் துவங்கியன
மழை மேகங்கள்.

,..

Thursday, June 17, 2010

. . .

இலையுதிர்கால போதிமரம்.
அடர்த்தியற்ற கிளைகளுக்கு கீழ்
கண்மூடி அமர்ந்திருந்தார்
புத்தர்.
உதிர்ந்து வீழும்
இலைகளில் ஒன்றாய்
கீழ்விழக் காத்திருந்தது
ஞானம்.
'இங்க உக்காந்திட்டு
என்ன மயிரைப் புடுங்கறான் இவன்?'
என்று
யோசிக்கத்துவங்கியது
மரத்தின் மேல்
அமர்ந்திருந்த காகம்.
விழுதல் ஞானமெனில்
பறத்தல்
வி
டு
லை.

Wednesday, June 16, 2010

இன்னும் சில ...

இந்த முறை நீ வந்தமர்ந்த கிளையில்தான்
பூக்கத்துவங்கியது
வசந்தத்தின் முதல் பூ
இன்னும் காலமிருக்கிறது
இலையுதிர்காலத்திற்கு

,..


நீ மறந்ததாய் சொன்ன வழியின்
முடிவில் இருக்கிறது
என் வீடு

,..

எந்தத் திருப்பத்திலும்
உன்னை எதிர்பார்க்கலாம் என்றாய் ...
திரும்பிப்பார்த்தபடி நடக்கிறேன்...


,..

நீ உட்கொள்ள உட்கொள்ள
உயிர்த்தெழுகின்றன என் வார்த்தைகள் எல்லாம்.
அடுத்த மழை பெய்வதற்கு முன்
நட்டு வைக்கிறேன்
உன் அத்தனை பார்வைகளையும்.


,..

எதைக்கேட்டு எதைப்பெறுவதென
நமக்குள் குழப்பம் வர,
இரு விரல் நீட்டி ஒன்றைத்தொடு என்கிறாய்...
ஒளிரும் உனது இரு விரல்களில்
ஒளிந்திருக்கும் இரவை
எனக்குத் தந்து விட்டு
நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு...


,..

Friday, June 11, 2010

. . .

அதிகாலை சூரியனிலிருந்து
புறப்பட்டுப்போகிறதோர்
குப்பை வண்டி.
காலத்தை இப்படியும்
இழுத்துச்செல்லலாம் போல
,..

. . .

ஒற்றை மரத்தை
ஒரு முறைதான் சுற்றினேன்
திருப்பி வைக்கப்பட்டிருக்கின்றது
மொத்த பூமியும்
,..

...

இளந்தளிர்கள் சிலிர்த்து நிற்கும்
செடிகளிடம்
இதற்கு மேலும்
என்ன கேட்கின்றது
அதிகாலையில்
பெய்யுமிந்த மழை
...

. . .

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
இரண்டிற்குமிடையில்
எங்கோ தங்கி நிற்கின்றன
தெளிந்த பூமியும்
அது நனைந்த வாசமும்
,..

Wednesday, May 19, 2010

மழையிடை...

தேநீர் இடைவேளையில் பெய்த மழை
பார்த்திருக்க முடிவதில் சந்தோஷப்படுகிறார்கள்
வறட்டு பூமி நனைந்தும் சிலிர்ப்பதில்லை

,..

எம் தேவி

உறையும் புன்னகைகள் நிறைந்திருக்கின்றன
என் வெளியெங்கும்
ஒரு வார்த்தை சொல்
உருகி கரைந்து போகட்டும் அத்தனையும் ...

Wednesday, May 12, 2010

புரிதல் கொல்

புரிந்து கொள்ளாதவர்களின் மத்தியில்
நமது புரிதல் கூட
அர்த்தமற்றுப்போவது
வியப்பாயிருக்கிறது

,..

Monday, April 5, 2010

,.. தொடரும்

உலகத்தில் மனிதர்கள்
மூன்று வகை
மரணம் கேட்டவர்கள்
மரணம் பார்த்தவர்கள்
மற்றும்
மரணம் அறிந்தவர்கள்.

,..

Monday, February 22, 2010

நீர்தீரும் வரை
நீவரும் வரை
எனுமிரு வரிகளின்
கவிதை சாத்தியத்தை
குறித்ததாயிருக்கிறது
கோடைப்பகல்கள்
மற்றும்
குளிரிரவுகளின்
சிந்தனைகள்.

நிர்வாணங்களின் சாயல்
தங்கி நிற்கிறது
நமது பார்வைகளில்.
அருகருகிருந்தும்
விலக்கித்தள்ளுகின்றன
பார்வையாடல்கள்.

முதல் மழையின் முதல் நொடியில்
பூக்கத்துவங்கிய மலர்
மொத்தமழையும்
பெய்து தீரும் வரை
இருந்து விடுமா என்ன?

எந்தக்கணத்தில் தங்கிநிற்கிறது
நம்மைப் பிரித்து வைத்த
மௌனம்.
அதைத் தெரிந்து கொள்ளும்
கணத்திலேயே
மறந்து போகலாம்
நாமிது வரை
கற்றுக்கொண்ட
அத்தனை மொழிகளும்.

எனது
ஒழுங்கின்மைகளின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை
ஒழுங்குபடுத்த துவங்குகிறாய்.
பக்கங்களுக்கு சிறகு முளைத்து
கவிதைகளோடு
பறந்துவிடப்போகிறது .

மொத்தக்காட்டையும் எரித்த பின்பு
அடங்கித்தணியும்
தணலின் வெப்பம்
உனது முத்தம்.

மோகங்கள் கூடிப்பிரியும்
அங்காடித்தெருவில்
நாமிருவரும்
சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.
எதையாவது தந்தால் மட்டுமே
ஏதேனும் பெற முடியும்
என்ற நிலை வந்த பிறகும்,
தியாகங்கள் குறித்துப்பேசுதல்
பைத்தியக்காரத்தனம் ...

இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
பேசாமலே இருந்து விட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்றுநம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள்
ஓடப்போகிறது வண்டி.

மோகம் கொண்டலையும்
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறுவேறுதான்.

Wednesday, January 6, 2010

சாத்தியங்கள்

இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
எதுவும் பேசாமலே இருந்துவிட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்று நம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள் ஓடப்போகிறது
வண்டி.

,..

ஒரு பறவையும் நிறைய வானங்களும்

மோகம் கொண்டலையும்
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறு வேறுதான்

,..