Saturday, February 17, 2018

மிகைநிறை

ஒரு டீ பருகும் நேரம்தான்
ஆகிறது
ஒரு கவிதை எழுதுவதற்கும்

ஒவ்வொரு மிடறாய் பருகுவது போலும்
வந்து விழும்
ஒவ்வொரு வார்த்தையும்

பருகியபின் மிஞ்சும்
காலிக்கோப்பையாய்
அமர்ந்திருக்கும்
ஒரு கவிதை

,..

Monday, February 20, 2017

மயன்

முதலில் எழுந்து சென்றது
வார்த்தைகள்தான்
அதற்குப் பின்னால்
அர்த்தங்களும்.
அவற்றையொட்டியே
கவிதையின் மரணம்
நிகழத்தொடங்கியது.
பின்னொருபொழுதில்
மயன் அவற்றுடன்
ஓடிப்பிடித்து விளையாடி
ஒவ்வொரு வார்த்தைகளாய்
உள்ளழைத்து வர
அர்த்தங்களும் பின்தொடர்ந்தன.
ஒரு பெருங்கவிதையும்
உயிர்த்தெழுந்திருந்தது.

,..

Tuesday, July 19, 2016

ப்ரியா . . .

ப்ரியா மற்றும்
ப்ரியா அல்லாத
ப்ரியா போன்றவர்களை
பார்த்தபடி இருக்கவே
படைக்கப்பட்டுள்ளன
இவ்வாழ்வும்
மற்றும் உலகமும்
என்றுணரும் கணத்தில்
உலகம் முடிகிறது
ப்ரியா தொடங்குகிறாள்
வாழ்க்கையும் ஒரு வட்டமடித்து
தன் வழிக்கே திரும்புகிறது
,..

Sunday, March 2, 2014

ஒரு சொல் ஒரு கடல்

வீசும் காற்றில்
அசையும் வார்த்தைகளை
ஒவ்வொன்றாய்ப் பறித்து
கடலுள் எறிகிறேன்.

உள்வாங்கும் அலைகளில்
மிதந்து மறையும் சொற்கள்
தூரத்துப் படகுகளில்
வெளிச்சமாய் உதித்தெழும்.

மறையும் சூரியனை
சென்றடையும் சொல் மட்டும்
அந்திக்கடலுள் கரைந்து போகும்.

மயங்கும் வெளிச்சத்தில்
நிரம்பித்தளும்பும் கடல்
ஒரு சிறு கவிதையை
முன்வைக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரமாய்
விழித்தெழுந்து
பின்னதை வாசிக்கத்துவங்கும்
பிரபஞ்சம்.

,..

Friday, October 4, 2013

. . .

உண்மைகள் கவிழும் நேரத்தில்
மிதக்கத் துவங்கும்
ஒரு சில பொய்கள் மற்றும்
அவற்றின் நிழல்கள்.

,..

இடம் பொருள் கடல் ...

அலைகளின் நடுவே
கடல் எழுதிய
கவிதைகளின் அர்த்தங்கள்
நுரையாய்க் கரையொதுங்க
மணல் வீடு கட்டி
அமர்ந்திருக்கும் சிறுமி
அந்நுரையை அள்ளி
சிறு வாசலில் கோலமிடுகிறாள்.
ஒவ்வொரு கவிதையாய்
அவளது வீட்டிற்கு
இடம் மாற்றி
ஆர்ப்பரிக்கிறது கடல்.

,..

Wednesday, July 24, 2013

மழைவோம் ...

மழை நனைக்கும் பாதை 
மனம் நிறைக்கும் நனைதல்
நனைதலின் பொருட்டு வாழ்வு


,..