மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Wednesday, October 24, 2012
இழை-மறை . . .
எப்பொழுது வீழ்வேன்
கொத்தித்தின்னலாம் என
வட்டமிட்டுப்பறக்கிறாய்.
இழைந்திழைந்து
வாழ்ந்தாகி விட்டது
கொஞ்சம் நிமிர்ந்து நிற்க விடு.
,..
Sunday, October 14, 2012
இல்லையா?
சேர்ந்திசை ஒன்றின்
இரு வேறு ஸ்வரங்களிலாய்
இசைந்து கிடக்கிறோம்.
இசைத்திருக்கும் கணங்கள் முக்கியம்
என்கிறேன் நான்.
இசையும் முக்கியம்
என்கிறாய் நீ.
இனி,
அந்த ஒற்றைப்பாடலை
நீ பாடினால் என்ன,
நான் பாடினால் என்ன,
இருவருமே பாடாமல்
இருந்தாலும் என்ன?
,..
Friday, October 12, 2012
கண்-கூடு
கூடடைந்த பறவைகள்
பறந்து திரிவதற்கான வானம்
எதுவென்கிறாய்.
உன் கண்களை நிறைத்திருக்கும்
கனவுகளில் மிதந்தபடி
புன்னகைத்து வைக்கிறேன்.
,..
Tuesday, September 4, 2012
நீ
உனது பெயரின் கவிதை
திறக்கப்பார்க்கிறது
அடைபட்டுக்கிடக்
குமோர்
மிருகத்தின் கூண்டை
,..
Tuesday, July 10, 2012
இன்னும் ஓர் சொல் . . .
உறங்கிக்கொண்டிருக்கும்
ஒரு சொல்லை
எழுப்புகிறது
பெருங்கனவொன்றிலிருந்து
விழித்தெழுந்த
மற்றொரு சொல்.
,..
Monday, May 7, 2012
காமாந்தகி . . .
மோகவலைப்பின்னல்களினூடே
மெதுவாய் நகர்ந்து வருகிறாய்.
சிக்கித்தவிக்கும் என்னில்
மிச்சமிருக்கும் காமத்தையும்
உறிஞ்சிக்குடித்துவிடு.
பூக்களின் நிறங்களிலாய்
மயங்கித்திரிந்த வாழ்க்கையும்
உண்ட தேனின் தித்திப்பும்
இனி
ஒருங்கே நுழையட்டும்
அடர்ந்த இருளின்
நிறமின்மைக்குள்.
,..
அலை . . .
அடிவாரங்களில்
ஒலியெழுப்பிச்செல்லும்
ரயில் வண்டியை
அமைதியாய்ப் பார்த்திருக்கிறது
யானை வடிவக் குன்று.
,..
நனைதல் பொருட்டான மழை . . .
உனது பெயரின் கவிதை
திறக்கப்பார்க்கிறது
அடைபட்டுக்கிடக்குமோர்
மிருகத்தின் கூண்டை.
,..
Friday, May 4, 2012
சிறகுள்ள கவிதை
புதிதாய்ப் பிறக்கும்
குழந்தைகளிடம் எல்லாம்
கொடுத்தனுப்பப்படுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்.
பின்
மௌனம் பழகும்
ஒவ்வொரு பொழுதிலும்
வார்த்தை சேர்த்து விளையாடும்
சின்னக்கைகளுக்குள்
சிறகு வளர்க்கின்றன
பின்னொரு பொழுதின்
கவிதைகள்...
,..
ம்...
ம் என்று சொல்லி
அதை ஓர் சொல் என்கிறாய்
ம் என்ற சொல்லில் துவங்கி
ம் என்றே முடியட்டுமோ என் கவிதையும்,
ம்?
---
Friday, April 20, 2012
வேனில்மழை . . .
ஒற்றை மழைக்குப்
பச்சை படரும் வனம்.
ஒரு பார்வைக்குறைவிற்கு
வறண்டு போகும் வரம்.
பெய்தொழியாமல்
கடந்து போகும் மேகம்.
பெய்தும் பெய்யாமல்
தகிக்க வைக்கும் உன் தேகம்.
மழைக்கும் மரணத்திற்கும் இடையே
பறந்து திரியும்
ஈசல் வாழ்க்கை
வாய்த்திருக்கிறது எனக்கு.
மழையிரவில்
ஈசல் தின்ன இறங்கும்
கருந்தேளின் லாகவம்
வாய்த்திருக்கிறது உனக்கு.
,..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)