Friday, October 4, 2013

. . .

உண்மைகள் கவிழும் நேரத்தில்
மிதக்கத் துவங்கும்
ஒரு சில பொய்கள் மற்றும்
அவற்றின் நிழல்கள்.

,..

இடம் பொருள் கடல் ...

அலைகளின் நடுவே
கடல் எழுதிய
கவிதைகளின் அர்த்தங்கள்
நுரையாய்க் கரையொதுங்க
மணல் வீடு கட்டி
அமர்ந்திருக்கும் சிறுமி
அந்நுரையை அள்ளி
சிறு வாசலில் கோலமிடுகிறாள்.
ஒவ்வொரு கவிதையாய்
அவளது வீட்டிற்கு
இடம் மாற்றி
ஆர்ப்பரிக்கிறது கடல்.

,..

Wednesday, July 24, 2013

மழைவோம் ...

மழை நனைக்கும் பாதை 
மனம் நிறைக்கும் நனைதல்
நனைதலின் பொருட்டு வாழ்வு


,..

மழைப்பயணம்

வரிகள் 
வரியலைகள்
மலைநிரைகளில்
மழை நிறைக்கும்
பார்வைக்கதைகள்.


அருகிருந்து
வானம் பார்த்திருப்பாய்
நீ.

கீழிறங்கும்
மேகம் பார்த்திருப்பேன்
நான்.

நிறைந்தும் வழிந்தும்
நகரும் வாழ்வு.
,..

Tuesday, July 9, 2013

மழை(யின்) வார்த்தை...

சலசலக்கும் காற்று அப்போதும் வீசிக்கொண்டிருந்தது.

அது காதலின் பாடல்
எதையும் கொண்டிருக்கவில்லை,
ஆயினும் நமது உரையாடலில்
அழகிய வார்த்தைகள்
நிறைந்திருந்தன.

நமது வெளியில் நிரம்பிய
அழகிய விஷயங்கள் குறித்து
நாம் பேசிக்கொண்டோம்.

ஏதொரு வெள்ளை மேகத்தின் கீழும்
ஒளிந்து கொள்ளும் சூரியனைப் பற்றி,
காலையில் துவங்கி
நேரத்தை
இரவு வரை இழுத்துச்செல்லும்
மாட்டுவண்டியைப் பற்றி,
பரந்த கடலையும்
நம்மை மறு கரைக்கு கூட்டிச்சென்ற
படகையும்
வரைந்த சிறுவனைப் பற்றி,
இன்னும் ஏதேதோ.

நாம் நமது தேநீர் கோப்பையிலிருந்து
மௌனத்தை அருந்தத் துவங்கிய போது
பாரம் நிறைந்த மேகங்களால்
வானம் இருண்டது.

இருப்பு சார்ந்த உணர்ச்சிகளை துறந்து
அம்மாவின் மடியில் ஆச்சர்யத்துடன் அமர்ந்திருக்கும்
ஒரு சிறு குழந்தையாய்
உன்னைப் பார்த்திருந்தேன்.

அப்போதுதான் நீ
'மழை பொழியட்டும்' என்றாய் ...
மழை பொழிந்தது.

,..

Tuesday, May 21, 2013

நிலவு-மரம் ...

மழை நின்ற இரவின் 
தெளிந்த வானம்.
மேகங்களில் இருந்து
வெளிவந்த நிலவை
மறைத்து நிற்கிறது
முன் நிற்கும் மரம்.
இலைகளினூடே தெரியும்
நிலவைப்பார்த்து
மரத்தில் முளைத்ததா
நிலவென்கிறாய்.
பின்,
அமைதியாய்ப் புன்னகைக்கும்
என் கைகளைப் பற்றிக்கொண்டு

'இல்லை, நிலவில் முளைத்திருக்கிறது மரம்'
என்றபடி
நீயும் புன்னகைக்கிறாய்.
என் வெளியெங்கும்
நிறைகிறது
நிலவு-மரம்.

,..

Saturday, May 18, 2013

மீண்டும் . . .

மழையாடிய பாதை
நடந்து நடந்து தேயும் மனம் 
எஞ்சி நிற்கும் ஈரம் 

,..

Thursday, May 16, 2013

. . .


உள்ளுறையும் ஒரு அழகிய பாடல் நீ.
உனை
வெளிக்கொணரும் முயற்சியில்
இசையாகும் பயணம்
நான்.
,..


Wednesday, May 8, 2013

நிலை மயக்கம்

நிலா தெரியாத இரவில் 
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.
பின்
நிலவு தெரிந்த பொழுதில், 
எண்ணி முடித்த 
நட்சத்திரங்களைப் பறித்து
நமது தோட்டத்தில் 
நட்டு வைத்தோம்.
விரிந்து நிற்கும் 
நட்சத்திரங்களின் வாசத்தில் 
மயங்கி நின்றது 
நிலவும்.

,.. 

Tuesday, May 7, 2013

விருப்பங்களின் சிறகுகள் ...


இரவின் வானில் 
உனை விட்டுப்பறந்த 
விருப்பத்தின் சிறகுகள் 
அதிகாலைக் கிளையில் 
எனை வந்தடைந்து 
சொல்லத்துவங்கின 
நிறைவேறியும் நிறைவேறாத 
விருப்பங்கள் குறித்து.

,..

Wednesday, May 1, 2013

:-)

புன்னகையின் மொழியை
கற்றுத்தருவதாய் சொல்லி 
கவிதைகள் வாங்கிக்கொண்டாய்.
பின் 
எனது பாடங்கள் குறித்து 
கேட்ட போதெல்லாம் 
புன்னகைக்க மட்டுமே செய்தாய்.

,.. 

 

Monday, February 25, 2013

மழைதல் ...

மழை பெய்து தீர்ந்த இரவின் 
சத்தங்கள் குறித்து 
பேசிக்கொண்டிருக்கையில் 
உதித்தெழுந்த நிலவை 
நீ பார்த்தாய், 
நீ பார்ப்பதை 
நான் பார்த்தேன்.
இனி கொஞ்சம் மழை 
நிலவிலும் பெய்யட்டும்.

,..

Friday, February 8, 2013

பயணங்களின் காடு


காத்திருக்கும் ஒரு காடு 
இடையோடும் ஒரு பாதை 
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறையும் பயணம் 
இங்கிருப்பேன் நான் 
அங்கிருப்பாய் நீ 
இடையிருக்கும் மொழி 

,..