Monday, February 22, 2010

நீர்தீரும் வரை
நீவரும் வரை
எனுமிரு வரிகளின்
கவிதை சாத்தியத்தை
குறித்ததாயிருக்கிறது
கோடைப்பகல்கள்
மற்றும்
குளிரிரவுகளின்
சிந்தனைகள்.

நிர்வாணங்களின் சாயல்
தங்கி நிற்கிறது
நமது பார்வைகளில்.
அருகருகிருந்தும்
விலக்கித்தள்ளுகின்றன
பார்வையாடல்கள்.

முதல் மழையின் முதல் நொடியில்
பூக்கத்துவங்கிய மலர்
மொத்தமழையும்
பெய்து தீரும் வரை
இருந்து விடுமா என்ன?

எந்தக்கணத்தில் தங்கிநிற்கிறது
நம்மைப் பிரித்து வைத்த
மௌனம்.
அதைத் தெரிந்து கொள்ளும்
கணத்திலேயே
மறந்து போகலாம்
நாமிது வரை
கற்றுக்கொண்ட
அத்தனை மொழிகளும்.

எனது
ஒழுங்கின்மைகளின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை
ஒழுங்குபடுத்த துவங்குகிறாய்.
பக்கங்களுக்கு சிறகு முளைத்து
கவிதைகளோடு
பறந்துவிடப்போகிறது .

மொத்தக்காட்டையும் எரித்த பின்பு
அடங்கித்தணியும்
தணலின் வெப்பம்
உனது முத்தம்.

மோகங்கள் கூடிப்பிரியும்
அங்காடித்தெருவில்
நாமிருவரும்
சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.
எதையாவது தந்தால் மட்டுமே
ஏதேனும் பெற முடியும்
என்ற நிலை வந்த பிறகும்,
தியாகங்கள் குறித்துப்பேசுதல்
பைத்தியக்காரத்தனம் ...

இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
பேசாமலே இருந்து விட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்றுநம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள்
ஓடப்போகிறது வண்டி.

மோகம் கொண்டலையும்
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறுவேறுதான்.