Tuesday, October 20, 2009

இருத்தல் - சில குறிப்புகள்

அன்பு பாசம்
காதல் நேசம்
என
அத்தனை பேரிட்டு
அழைத்த பின்பும்
ஒருவர் மற்றவருடனான
உறவுகளில்
அனைவரது பயமும்
அவரவர்களை குறித்தானதாகவே
இருக்கிறது...

Saturday, October 10, 2009

அடுத்த கதை

முழுக்கதையையும் கேளாமல்
நீயாய் எடுத்த
முடிவுகளுக்குப் பின்னால்
அலைந்து திரிகின்றன
என் அத்தனை கதைகளும்...

.,

Monday, October 5, 2009

கதை சொல்லல்

ஆளுக்கொரு கதை சொல்லி
அதை உண்மைக்கு அருகில்
நிறுத்தப் பார்க்கிறோம்.

உண்மையோ
ஏதொன்றிலும் நிலைபெறாமல்
அலைந்து திரிகிறது.

நிற்க வைத்த கதைகள்
நின்றபடி இருக்க
ஒருபொழுது மறுபொழுதாகையில்
ஒரு வாழ்க்கை தூரம்
தள்ளி நிற்கும் உண்மை.

நாம் சொன்ன கதைகளைப்
பிறர் நம்புவதைக் காட்டி
நம்மையும்
நம்பச்சொல்வார்கள் இனி.

கதைகளின் வாசனை
நிரம்பி நிற்கும் வெளியில்
உண்மையைப் பற்றிக் கவலைப்பட்டு
என்ன ஆகப்போகிறது.

Thursday, October 1, 2009

முதல் மழை இரவு

கட்டங்கள் உருள
பகடைகளில் நகர்ந்து
ஏணியில் இறங்கி
பின்
பாம்பின் வால் வழி ஏறி
அதன் வாயடைந்து நிற்கையில்
பார்க்க நேரிட்டது
விஷம் தொக்கி நிற்கும்
பல்லொன்று.
இனி பரமபதம் அடைவதை
தள்ளி வைத்து
என்ன ஆகப்போகிறது.

.,