கனவுகள் வேய்ந்த கூரைக்குக் கீழ் அமர்ந்திருந்தார்கள் அனைவரும்.
உள்நுழைந்த நிலவொளியில்
உனதிருப்பை உணர முடிந்தது.
முதலில் பெய்த மழையைக் குறித்து
பேச ஆரம்பித்த போது
நீ எழுந்து போனாய்.
வானத்தை இரண்டாய்ப் பிளந்தபடி
கடந்து சென்றது ஒரு மின்னல்.
அதைத் தொடர்ந்து வராத
இடியைக் குறித்து
எவரும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை.