Sunday, November 30, 2008

...

காலமற்றிருந்த நதியோடி
உருண்டிருந்த வாழ்வில் தொடங்கி
துப்பாக்கி தூக்கியலையும்
முரட்டுக்காலணி மனிதர்கள் வரை
கூழாங்கற்கள்
பார்த்திருந்தது ஏராளம்.

மோதி வீழ்ந்து
விறைத்திருந்த முனைகள் ஒடிந்து
மென்மை பழகி
இசைவயப்பட்ட
அவற்றின் ஒற்றைப்பாடம்
எவருக்கும் புரியாமல் போவதையும்
இனி
பார்த்திருக்கக்கூடும்.

...

மறுகரையில் இருப்பதாகச்சொல்லி
செய்தியனுப்புகிறாய்.

நம்மிடையே நதியோடியிருந்த
காலம் போய்
வெகுநாட்களாகிவிட்டது.

இப்போது நான் வந்து நிற்கும்
கடலுக்கு
எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள்
என்று
யாருக்குத்தெரியும்?

Saturday, November 29, 2008

...

அழகிய கைகளின் சித்திரப்பாவைதான் ... 
ஆனாலும் என்ன? 
ஆட்டுவித்தால் 
ஆடித்தான் ஆக வேண்டியிருக்கிறது ...

...

செவிகளை என் பக்கம் சாய்த்து,
கண் மூடி அமர்கிறாய்,
வார்த்தைகளற்றுப் போகிறது எனக்கு ...

Friday, November 28, 2008

...

நாம் அமர்ந்து பேசிய
இடங்கள் அனைத்தும்
இப்போது 
சக்கரங்களால் இயங்குகின்றன.
அவரவர் பாதை
அவரவர்க்கென்றோம்.
எந்தப் பாதையில்
எங்கிருக்கிறாய் நீ?
முடிவுகளற்று நீள்கிறது
பயணம்...

Monday, November 24, 2008

...

எதன் முழுமை
எதிலென்றறியாமல் 
வெவ்வேறாய் பிரிந்திருக்கிறோம்.
சேர்ந்திருத்தல் இனி
எளிதாக்கப்படினும்,
முழுமையடைதல் கடினம்.

...

சிலரை நினைவுபடுத்தும் 
வேறு சிலர்
எல்லா கூட்டத்திலும்
இருந்து தொலைப்பார்கள்.

...

ஏழு மரம் 
ஏழு நதி தாண்டி
உனையடைந்து நிற்கிறது 
என் பயணம். 
நதியின் மாற்றமும்
மரத்தின் நிலைத்தலும்
வசப்படட்டுமினி.
முரண்பட்டிருத்தல்
முறையாகும் தளத்தில்,
இடம் பொருள் காலத்தில்
நம்பிக்கையற்றிருத்தல் நலம்.

...

எழுதப்படாத கவிதையின்
முதல் வரி போல் அமர்ந்திருக்கிறாய். 
முதல் பார்வையில்
தொடங்கிய பயணம்
முற்றுப்பெறாமல் நீள்கிறது.  
எங்கெங்கோ அலைந்து
வருமிக்காற்று, 
உறைந்து நிற்கிறது
நம்மிடையே.
உருப்பெற்று முழுமை பெறட்டும் 
உன் புன்னகை. 
சேருமிடம் பற்றிய கவலையற்று
சிதறிக்கிடக்கிறதென்
காலம்.

...

இலையுதிர் காலமும்
கனவுதிர் காலமும் கடந்து
பனியுதிர் காலத்தில்
நிற்கிறதென் படகு ...

Saturday, November 15, 2008

...

அழகிய மழையொன்றை
தொலைத்துவிட்டுக்
காத்திருக்கிறதென் வானம்

Wednesday, November 12, 2008

...

நிறைந்தும் வழிந்தும்
கரைகள் கவிந்தும்
கடலாகின்றன நதிகள் ...

அடுத்த மழையும் பெய்தாகிவிட்டது ...