Thursday, September 18, 2008

...

உள்நிறையும் வார்த்தைகளில்
ஒளிந்திருக்கிறது உன் புன்னகை.
கைவல்யக்கனவுகளின்
நிறம் மங்கும் பொழுதினில்
நீயிருப்பதை
நினைவு கொள்கிறேன்.
உனைப்பிரிந்த வார்த்தைகளுக்குள்
முடங்கிக் கிடக்கிறதென் காலம்.
காலமற்றிருப்பதன் சுகவாழ்வு
இன்னமும் வசப்படவில்லை.
உனது மொழி திறப்பதற்கானவென்
காத்திருப்பு
காலத்திற்குள் நிகழ்கிறதா
அல்லது வெளியிலா
எனக் கவலைப்படுகிறாய்.
நீ தெளிவுறுவதற்கான மொழியை
இப்பொழுதுதான்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
பின்
மொழியறிந்து
மொழிதிறக்கும் முதற்கணத்திலேயே
கற்றுக்கொள்வோம்
மொழியின் அமைதியையும் ...



Monday, September 15, 2008

...

சரக்கு ரயிலில்
அடிபட்டுச்செத்த பூனைக்கு
முகமற்ற மரணம் ...

...

வாகன நெரிசலின்
பதட்டம் ரசித்தபடி
வரிசையாய் அமர்ந்திருக்கின்றன
சிவப்பு விளக்கின் மேல்
வெள்ளை புறாக்கள் ...

...

எனது அதி உயரத்தின்
விளிம்புகளில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
தடுப்புச்சுவராய் இருபுறமும்
எழுந்து நிற்கின்றன
சில வார்த்தைகள்.
ஆழத்திலிருந்து
அழைக்கிறதோர் புன்னகை.
நமது உயரங்களும்
நமது ஆழங்களும்
நமதாக மட்டுமே
இருக்கும் பட்சத்தில்
சமநிலையிலும்
நிகழலாம் மரணம் ...

...

காக்கப்பட்டதென் நிர்வாணம்
அறிந்த நிர்வாணத்திலும்
ஆச்சரியங்களேதுமில்லை ...

இருவர்க்கும் பொதுவாயிருந்த
கடைசியிழையும்
அறுபட்டுப்போனபின்
எந்தப்பட்டம்
எந்தத்திசையில்
பறந்தாலென்ன -
அடிக்கின்ற காற்று
அடித்துக்கொண்டேதான் இருக்கும் ...

Saturday, September 6, 2008

...

'உனைப்போலத்தான் நானும்'
என்பதை
உயர்வு நவிற்சி கலந்து
சொல்லிப்போகிறாய்

போலவும் உயர்ந்தும்
ஒரே நேரத்தில் இருப்பது
உனக்கு மட்டும்தான்
சாத்தியப்படும் போலிருக்கிறது...