Wednesday, November 16, 2011

. . .

எனக்கும் எனக்குமான
இடைவெளிக்குள்
அடைபட்டுவிடுகின்றது
எல்லையில்லாப் பெருவெளி

,..

Tuesday, November 15, 2011

மையல் . . .

தேய்பிறை நிலவில்
எரிகின்றது காடு.
நிலவெரித்த மிச்சத்தை
சேர்த்து வைக்கும்
எனது முயற்சிகளை
முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது
உன் அருகாமை.
காட்டில் தொலைவதற்கும்
காடே தொலைவதற்கும்
உள்ள வேறுபாட்டை
யோசிக்க விடாமல்
தற்பொழுதில் நின்று திரிகிறது
காலம்.

,..

Tuesday, August 16, 2011

முன் பின்னறியா மழை

மழையைத் துரத்திக்கொண்டு ஓடும்
குழந்தைகளைத்
துரத்திக்கொண்டு போகிறது
இன்னொரு மழை

,..

Sunday, July 31, 2011

தொடர்பு எல்லைகள்

நாங்கள்
இளங்கலை பயின்றிருந்த
நாட்களில்
கல்லூரிப் படிக்கட்டில்
அமர்ந்து கொண்டு
சினிமாப் பாடல்களை
அழகாகப் பாடிக்காட்டிய
அக்காவின் பெயர்
ஞாபகத்திலில்லை.
சரவணனை கைபேசியழைத்து
கேட்க முயன்றேன்,
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பதாக
மூன்று மொழிகளில் மொழிந்து
அமைதியானாள் பெண்ணொருத்தி.
இனி சரவணனுக்கு
அந்த அக்காவின் பெயர்
தெரிந்திருந்தாலும்
அவனுக்காகப் பேசிய
இந்தப்பெண்ணின் பெயர்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்ற நினைப்பு மட்டும்
வந்து வந்து போகிறது
அப்போதிருந்து.

,..

Monday, March 7, 2011

ஏழாவது குரல்

ஏழாவது மனிதனின்
குரலைக் கேட்க
காத்திருந்தவர்
மொத்தம் எட்டுப்பேர்

,..

Sunday, March 6, 2011

மொழியும் நீ . . .

மொழியின் அமைதி குறித்து
முன்பொரு முறை உன்னுடன்
பேசியதாய் ஞாபகம்.

இப்போழுததை நினைவுபடுத்தி
பின் பலமுறை
பேச நேரிட்டாலும்,
அமைதியாகவேதான்
இருக்குமோ என்னமோ -
மொழியும்,
மொழியின் அமைதியும்?

,..

Wednesday, February 23, 2011

இன்னும் சில மரங்கள்

வழியெங்கும் இலையுதிர்த்துக்
காத்திருக்கின்றது
காலம்
இன்னும் கொஞ்சம் பூக்கள்
மலர்வதர்க்கும்
இன்னும் சில காய்கள் கனியாகிப்
பின் மண்சேர்ந்து மரமாவதற்கும் ...

,..

Saturday, January 29, 2011

நிழல் பூனை ...

தனித்திருக்கும் பூனைக்குப்பின்னே
தனித்திருக்கிறது
நிழல்

,..

Monday, January 17, 2011

. . .

மிகையற்றிருத்தலின்
கலை
வசப்படவேண்டுமினி ...