நாங்கள்
இளங்கலை பயின்றிருந்த
நாட்களில்
கல்லூரிப் படிக்கட்டில்
அமர்ந்து கொண்டு
சினிமாப் பாடல்களை
அழகாகப் பாடிக்காட்டிய
அக்காவின் பெயர்
ஞாபகத்திலில்லை.
சரவணனை கைபேசியழைத்து
கேட்க முயன்றேன்,
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பதாக
மூன்று மொழிகளில் மொழிந்து
அமைதியானாள் பெண்ணொருத்தி.
இனி சரவணனுக்கு
அந்த அக்காவின் பெயர்
தெரிந்திருந்தாலும்
அவனுக்காகப் பேசிய
இந்தப்பெண்ணின் பெயர்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்ற நினைப்பு மட்டும்
வந்து வந்து போகிறது
அப்போதிருந்து.